தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துக் கடை உரிமையாளர்களுடன் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் பேசியதாவது: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு வருகின்றது. காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பொதுமக்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு உரிய சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்தவாரே ஏதேனும் மருந்துக் கடையில் இருமல், காய்ச்சல், ஜலதோசம், தலைவலி, உள்ளிட்டவற்றிற்க்கு தன்னிச்சையாக மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும், மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் சில்லரை விற்பனையாக யாருக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டாம் எனவும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் போதை மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை தற்போது பலரும் பயன்படுத்துவதாக தகவல் வருகின்றது. இவைகள் விற்பனை செய்வதை மருந்து கடைகள் கைவிட வேண்டும் என கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.
மேலும், கடைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கிட வேண்டும் எனவும், மருந்தகத்திற்கு வரும் நபர்களுக்கு கொரோனா நோயின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவையா என்பதனை கண்டறிய வேண்டும் எனவும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனே அவர்கள் மருத்துவ கண்காணிப்பு குழுவினருக்கோ, காவல் துறையினருக்கோ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, மருந்தகங்களில் ஊசி போடக்கூடாது என கண்டிப்புடன் எச்சரித்தார். காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.