அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்

பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலகத்திற்கு பொதுமக்கள் பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-02 18:07 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி பேரூராட்சி. இப்பேரூராட்சிக்கு உட்பட்ட 14, 15, 16 மற்றும் கக்கன்ஜி காலணி ஆகிய பகுதிகளில் வடிகால், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதியினர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தற்போது வரை செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளின் நீண்ட கால கோரிக்கைகளை செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர்.

 தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து பூட்டு சங்கிலியுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்றவர்களிடம் பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலா, பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News