திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் கொலை-4 பேர் கைது

Update: 2021-01-28 06:45 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில் காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ,மேல்மங்கலம் அருகே வைகை புதூர் சாலை ஓரமாக கடந்த 21ம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக மேல்மங்கலம் கிராம அலுவலர் ராஜவேல் காவல்துறைக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (29) என்பது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆனந்தராஜின் அத்தை கருப்பாயி வடுகபட்டி பகுதியில் வசித்து வருவதாகவும் கருப்பாயியின் மகள் விஜயசாந்தியும் ஆனந்தராஜூம் காதலித்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக விஜயசாந்தி மற்றும் அவரது சகோதரன் உறவு முறையுள்ள பிரபாகரன் ஆகியோர் வடுகபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது மடக்கிப் பிடித்து அவர்களிடம் விசாரணை செய்தனர்.விசாரணையில், ஆனந்தராஜூக்கு அவரது பெற்றோரின் ஏற்பாட்டின் பேரில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று (27 ம் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த தகவலை தெரிந்த விஜயசாந்தி கடந்த 21- ம் தேதி வடுகபட்டிக்கு அழைத்து ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது , ஏற்பட்ட தகராறில் விஜயசாந்தி பிரபாகரன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆனந்தராஜை கழுத்தை நெரித்துக் கொலை செய்து சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர், திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் உள்ள ஆசைப் பாண்டி என்பவரது வீட்டில் விஜயசாந்தி , பிரபாகரன் இருவரும் மறைந்து இருந்துள்ளனர். விஜயசாந்தியின் சகோதரி வித்யா என்பவர் கொலைக்கான சதித் திட்டம் தீட்டித் தந்ததும் தெரிய வந்தது.தொடர்ந்து, கொலைக்கு திட்டமிட்டு கொடுத்த வித்யா, கொலையாளிக்கு அடைக்கலம் அளித்த ஆசைப்பாண்டி, விஜயசாந்தி மற்றும் பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கைது செய்து, ஜெயமங்கலம் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News