முல்லை பெரியாறு அணை நிரம்பினால் இடுக்கி மாவட்டத்திற்கு ஏன் ரெட் அலர்ட்?
விஷமத்தனத்தை நிறுத்தாவிட்டால், விளைவுகள் மோசமாகும்: கேரள அரசை எச்சரிக்கும் 5 மாவட்ட விவசாயிகள்;
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 137 அடியை எட்டி உள்ளது. அணையில் 142 அ வரை நீரை சேமிக்க முடியும். அப்படிப்பட்ட சூழலில் இடுக்கி மாவட்டத்திற்கு ஏன் ரெட் அலர்ட் விடுத்து விஷமத்தனத்தில் ஈடுபட வேண்டும். இப்படி தரங்கெட்ட முறையில் விஷமத்தனம் செய்தால், விளைவுகள் மோசமாகும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் எச்சரித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 137 அடியை எட்டி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2150 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையும் நிரம்பி உள்ளது. வைகை அணைக்கு மூலவைகையில் இருந்தும், கொட்டகுடி ஆற்றில் இருந்தும் விநாடிக்கு 1300 கனஅடி நீர் வரத்து உள்ளது. இதனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவினை விநாடிக்கு 500 அடியாக குறைத்து, முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்த வேண்டும்.
முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது. நீர் மட்டத்தை உயர்த்த அதிக வாய்ப்புகளும் உள்ளது. சுப்ரீம் கோர்ட் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்க அனுமதி வழங்கி பின்னர், தற்போது 6வது முறையாக அணை நீர் மட்டம் 137 அடியை கடந்துள்ளது. முல்லை பெரியாறு நீருக்கும், இடுக்கி மாவட்டத்திற்கும் தொடர்பில்லை. பின்னர் ஏன், இடுக்கி மாவட்டத்திற்கு தேவையில்லாமல் ரெட் அலர்ட் கொடுத்து மக்களை அச்சுறுத்த வேண்டும். முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை கடந்து கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டாலும், அந்த நீர் எந்த பாதிப்பும் இன்றி இடுக்கி அணைக்கு போய் சேர்ந்து விடும்.
விளைநிலங்களுக்கோ, மக்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தாது. இந்நிலையில் பீதியை கிளப்ப வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கேரள அரசு ரெட் அலர்ட் கொடுத்தால், தமிழக பொறியாளர்கள் அதனை ஏற்க கூடாது. தமிழக பொறியாளர்களுக்கு உரிய பாதுகாப்பினை தமிழக அரசு வழங்க வேண்டும்.
கேரள அரசு ஒருசிலரின் பேச்சை கேட்டு விஷமத்தனத்தில் ஈடுபட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எப்படியாவது இம்முறை அணையில் 142 அடி தண்ணீர் தேக்கியே ஆக வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.