முல்லை பெரியாறு அணையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவை விட, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.;
முல்லை பெரியாறு அணையில் நீர் நிரம்பி, ரம்மியமாக காணப்படுகிறது.
முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதாலும், அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதாலும் நீர்மட்டம் உயரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது.
முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணை நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்து 138 அடியை எட்டியது. அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை விநாடிக்கு 2131 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.
அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அணை நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் அணைநீர் மட்டம் 137.60 அடியாக உள்ளது. இனிமேல் பலத்த மழை பெய்தால் மட்டுமே நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.