முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் களமிறங்கும் கேரள தமிழர்கள்

Mullaperiyar Dam Latest News - முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக கேரள தமிழர்கள் களம் இறங்குவார்கள் என அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-21 04:01 GMT

அன்வர் பாலசிங்கம்.

Mullaperiyar Dam Latest News - முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் தமிழகத்திற்கு ஆதரவாக கேரள தமிழர்கள் களம் இறங்குவார்கள் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு தர்மப்படி தீர்வு காணலாம். அல்லது சட்டப்படி தீர்வு காணலாம். இரு அரசுகளும் பேசி முடிவுக்கு வரட்டும். மாறாக கேரள விஷமிகளும், சிறு, சிறு அரசியல்வாதிகளும் தங்கள் பிழைப்பிற்காக முல்லைப்பெரியாறு அணையினை பயன்படுத்தக்கூடாது. பெரியாறு அணை பிரச்னை பற்றி பேசினாலே கேரளாவில் அவர்களுக்கு ஏராளமான பணம் கொடுத்து உதவுகின்றனர்.

இந்த பணத்திற்கு ஆசைப்பட்டும், மக்கள் மத்தியில் தங்களை அடையாளம் காட்டவும் அவர்கள் பெரியாறு அணையினை பற்றி பீதி கிளப்பி விஷம பிரச்சாரம் செய்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் நடந்த முல்லைப்பெரியாறு அணை கலவரத்திற்கு ஆதரவாக மூணாறிலும் தமிழர்கள் களம் இறங்கினர். அந்த கலவரத்தில் ஆடிப்போய் அடிபணிந்த கேரளாவிற்கு இப்போது குளிர் விட்டுள்ளது.

இனிமேல் யாராவது முல்லைப்பெரியாறு அணைப்பற்றி தவறாக விஷம பிரச்சாரம் செய்தால், கேரள தமிழர்களை வைத்தே அவர்களை நாங்கள் முடக்குவோம். அதற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். கேரள தமிழர்கள் பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களில் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாகவும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் களம் இறங்குவார்கள்.

இதனை பிரிவினை என்று சித்தரிக்க முற்பட்டால் நாங்கள் சட்ட ரீதியில் சரியான பதிலடி தருவோம். தமிழகத்தில் இருந்து 64 வகையான உணவுப்பொருட்களையும், 24 வகையான கனிமங்களையும் கேரளாவிற்கு தினமும் பல ஆயிரம் டன் கொண்டு செல்கிறீர்கள். ஆனால் தமிழர்கள் வாழக்கூடாது என நினைக்கின்றனர். கேரளாவில் பிரிவினை பேசினால் அது உரிமை. தமிழகத்தில் உரிமையை பேசினால் அது பிரிவினையா? வாருங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சந்திப்போம். இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் உங்களை எதிர்த்து வாதிட நாங்கள் வரவில்லை. அதனால் வென்றீர்கள். இப்போது வாருங்கள். எங்கள் தரப்பு நியாயத்தை அங்கு வென்று காட்டுங்கள் பார்க்கலாம்.

இவ்வாறு தெரிவித்தார். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News