உத்தமபாளையம் பகுதியில் பலத்த மழை: வெள்ளப் பெருக்கால் நெற்பயிர்கள் சேதம்

தேனி மாவட்டம் வீரபாண்டி, உத்தமபாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பல நுாறு ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன

Update: 2021-10-05 04:00 GMT

தேனி மாவட்டம், வீரபாண்டி, உத்தமபாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தன. மேலும்,  பல வீடுகளும் சேதம் அடைந்தன.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம், புதுப்பட்டி, கம்பம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. வீரபாண்டியில் மட்டும் ஒரே நாளில் 124 மி.மீ., மழை பதிவானது. போடியில் 30.2 மி.மீ., பெரியாறு அணையில் 25.6 மி.மீ., கூடலுாரில் 20 மி.மீ., உத்தமபாளையத்தில் 17.3 மி.மீ., மழை பதிவானது. இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நெற் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில்,  தற்போது பெய்த மழையால் பல நுாறு ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் சாய்ந்து பலத்த சேதம் அடைந்துள்ளன. பல நுாறு ஏக்கர் பரப்பில் விளைந்த நெற்கதிர்கள் சாய்ந்து விட்டதாகவும், ஒரு ஏக்கருக்கு நெல் சாகுபடிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், இந்த மழையால் பயிர்கள் சேதமடைந்து பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். அதேபோல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், மழை சேத விவரம் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News