கேரளாவில் பெரும் வெள்ளம்: தேனி மாவட்ட விவசாயிகள் கடும் விமர்சனம்

கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளச்சேதத்திற்கு அரசின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையே காரணம் என்கின்றனர் விவசாயிகள்

Update: 2021-10-19 12:15 GMT

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் முண்டக்கயத்தில் பயணிகளுடன் நீரில் மூழ்கியுள்ள பஸ்.

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு கேரள அரசின் பிடிவாதமே காரணம் என தேனி மாவட்ட பொதுமக்களும், விவசாய சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை தான் கடுமையாக பேரழிவினை ஏற்படுத்தும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இந்த வெள்ளச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சி ஆகும். கேரள வெள்ளச்சேதங்களை தவிர்க்க வேண்டுமானால், பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை, வனத்திற்குள் அணை கட்டி கேரளாவிற்குள் திருப்பாதீர்கள் என தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் விடுத்த வேண்டுகோளை கேரள அரசு ஏற்கவில்லை.

அதேபோல், சபரிமலை பாம்பாற்று (பம்பை நதி) நீரை,  விருதுநகர் மாவட்டம், வைப்பாற்றுடன் இணைத்தால், அந்த வெள்ளம் கேரளாவிற்குள் செல்வது தடுக்கப்படும். அதேபோல் இடுக்கி அணையி்ல் தேவைக்கு அதிகமாக நீரை சேமிக்காதீர்கள். எங்களுக்காவது தாருங்கள் என தமிழக அரசு எவ்வளவு கெஞ்சியும் கேரள அரசு கண்டு கொள்ளவில்லை.

தற்போது முல்லை பெரியாற்றில் இருந்து, கேரள அரசு திருப்பி விடப்பட்ட நீர், இடுக்கி அணைக்கு வரும் நீர், பம்பை ஆற்று நீர் என அத்தனை நதிகளும் கரைபுரண்டு கேரள மாநிலத்தை வைத்து செய்து விட்டன. உண்மையில் ஊடகங்களில் வெளியான தகவல்களை விட பல மடங்கு வெள்ளச்சேதம் கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் முழு  விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று இடுக்கி அணை திறக்கப்பட்டு அந்த நீர் முழுமையாக கடலில் கலந்து வருகிறது.

இது பற்றி கருத்து தெரிவித்து வரும், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்ட விவசாயிகள், 'தண்ணீரை கடலுக்கு விட்டாலும் விடுவேன், உங்களுக்கு தர மாட்டேன், எத்தனை பேர் வெள்ளத்தில் செத்தாலும் எங்களுக்கு கவலையில்லை' என்ற பாணியில் கேரள அரசு கேரள மக்களை பற்றியும் கவலைப்படாமல், தமிழக மக்களைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டதன் விளைவை தற்போது கேரள அப்பாவி மக்கள் அனுபவிக்கின்றனர்.

இதன் மூலம் பாடம் கற்றுள்ள கேரள அரசு, இனியாவது பேரிடர் காலங்களில் எப்படி மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்பதை கடைப்பிடிக்க முன் வரவேண்டும் என சற்று கடுமையாகவே கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். முல்லை பெரியாற்று நீரை பயன்படுத்தும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் விவசாயிகள் வழியாக இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் அதிகமாக  பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News