தேனி மாவட்டத்தில் பலத்த மழை: முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால், முல்லை பெரியாற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலுார், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், வீரபாண்டி பகுதிகளில் பெரும் அளவு மழை பதிவாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் 60 சதவீத நிலப்பரப்பில் பெய்யும் மழை நீர் முழுக்க, முல்லை பெரியாற்றுக்கே வந்து சேரும்.
தவிர சுருளிஅருவி, சண்முகா நதிகளில் வரும் நீரும் முல்லை பெரியாற்றுக்கு வந்து சேரும். முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இத்துடன் மழைநீரும் சேர்ந்துள்ளதால் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் முல்லை பெரியாற்றில் வந்து கொண்டுள்ளது. மழை தொடர்வதால் எப்போது நீர் வரத்து அதிகரிக்கும் என்பது தெரியாது.
எனவே, முல்லை பெரியாற்றில் குளிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் இணைந்து இந்த தடை உத்தரவை செயல்படுத்தி வருகின்றன. இன்று, மகாளய அமாவாசை என்பதால் பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். வருவாய்த்துறையினர் ஆற்றின் கரையோர கிராமங்களை கண்காணித்து வருகின்றனர். ஆற்றின் நீர்வரத்து நிலவரத்தையும் பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.