கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
கம்பம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இரவு பணிக்கு சரிவர மருத்துவர்கள் வருவதில்லை என கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார் செய்துள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் கம்பம் பகுதி மக்கள் மட்டுமின்றி, சுற்றிலும் உள்ள கிராம மக்கள் மற்றும் கேரளா மக்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கம்பம் நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் பாசித், நகர செயலாளர் சாகுல் நகர பொருளாளர் அஜார் மற்றும் நிர்வாகிகள் கம்பம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்னரசனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கம்பம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இரவு நேரத்தில் எப்போது சென்றாலும் மருத்துவர்கள் பணியில் இருப்பது இல்லை. எதாவது காரணம் சொல்லப்படுகிறது.
பெண்கள் பிரசவ வார்டில் பிரசவத்திற்கு வரும் பெண்களை அங்குள்ள பெண் டாக்டர்கள் மிகவும் தரக் குறைவாக பேசி வருகிறார். இந்த அவல நிலையை போக்கி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த டாக்டர் பொன்னரசன், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், மருத்துவர்கள் பற்றாகுறையை சரி செய்யவும் இரவு நேர பணியில் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உறுதி கூறியுள்ளார்.
இந்த மனுவின் நகல்களை மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை செயலர் மற்றும் முதல்வர் தனி பிரிவு மற்றும் அதிகாரிகளுக்கு என தபால் மூலமாக புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது.