விவசாயிகளின் எதிர்ப்பை மீறி குடிநீர் திட்டத்திற்கு பூமிபூஜை

கூடலுார் பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, மதுரை குடிநீர் திட்டத்திற்கு அதிகாரிகள் பூமிபூஜை போட்டனர்.

Update: 2022-05-18 10:59 GMT

மதுரை குடிநீர் திட்ட பூமிபூஜைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த விவசாயிகளை நடுவழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கூடலுார் லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல 1296 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனக்கூறி கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகளும், பாரதீய கிஷான் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தடுப்பணை கட்டப்படும் இடத்தினை நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த சலவை தொழிலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் லோயர்கேம்ப்பில் இந்த திட்டத்திற்கு பூமிபூஜை நடத்தினர். இதனை தடுக்க வந்த கூடலுார் கூட்டாற்று வண்ணான்துறை அருகே ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகளை போலீசார் அங்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.

இந்த பூமிபூஜை நடைபெறும் போது, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்தனர். கலெக்டர் உட்பட யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Tags:    

Similar News