சாக்கு மூட்டையில் 52 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது; 5 பேர் 'எஸ்கேப்'
கம்பத்தில் 52 கிலோ கஞ்சாவை சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார். ஐந்து பேர் தப்பி ஓடி விட்டனர்.
கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலை தடுக்க எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ., விஜய் ஆனந்த் தலைமையில் கம்பத்தில் இருந்து கோம்பை செல்லும் ரோட்டோராம் நாககன்னி கோயில் அருகே சோதனை மேற்கொண்டனர். அங்கு இரண்டு பேர் சாக்கு மூட்டைகளுடன் நின்றிருந்தனர்.
அவர்களை போலீசார் வளைத்து பிடித்து சோதனை செய்தனர். அந்த சாக்கு மூட்டைக்குள் 52 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரில் கம்பம் பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவர் போலீசில் சிக்கினார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கஞ்சா கடத்தலில் தப்பி ஓடிய சுந்தர், முத்துப்பாண்டி, பரத், புகழ், அன்பழகன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.