15 ஆண்டுக்குப்பின் ஆக்கிரமிப்பு அகற்றம்: பாதை கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி

போடி மலைக்கிராமத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்பு முற்றிலும் அகற்றப்பட்டது.

Update: 2021-10-28 10:14 GMT

போடி மெட்டு மலைப்பாதையில் ஆக்கிரமிப்பாளர் ரோட்டில் படுத்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தார். இவரை அகற்றிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை சீரமைத்தனர்.

போடி மெட்டில் இருந்து மணப்பட்டியை இணைக்கும் மலைப்பாதையினை தனிநபர் ஒருவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து அராஜகம் செய்து வந்தார். இன்று அதிகாரிகள் குழு அந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பாதை வசதி செய்து கொடுத்தனர்.

போடி மெட்டிற்கு அருகே உள்ள மணப்பாறை கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த மலைப்பாதையினை சுப்பிரமணி என்பவர் 15 ஆண்டுகளாக ஆக்கிரமித்து மக்களை நடக்க விடாமல் அச்சுறுத்தி வந்தார். விளைபொருட்களை எடுத்து வந்தால், இந்த பாதையை பயன்படுத்தியதற்கு கப்பம் வசூலித்து அராஜகம் செய்வார்.

இவரது அராஜகத்திற்கு பயந்த பொதுமக்கள் இவரிடம் பிரச்னை எதற்கு என ஒதுங்கியே வாழ்ந்தனர். யாராவது இறந்தால் அந்த பாதை வழியாகவே உடலை எடுத்து வர வேண்டும். ஆனால் இறந்தவர்களை கொண்டு வர முடியாதபடி கேட் அமைத்து மூடி சுப்பிரமணி அராஜகத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த தொல்லை அதிகரிக்கவே பொதுமக்கள் இப்பிரச்னையை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பிரச்னையை அறிந்த கலெக்டர் முரளீதரன் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் கொண்ட மிகப்பெரிய குழு இன்று பொக்கலைன் உள்ளிட்ட வாகனங்களுடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்றியது.

சுப்பிரமணி ரோட்டில் படுத்து மறித்து பெரும் பிரச்னையில் ஈடுபட்டார். அவரை வெளியேற்றிய போலீசார் முழுமையாக பாதையை சீரமைத்து, கொடுத்து, இனி பிரச்னை செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவோம் என எச்சரித்து அனுப்பினர். அதிகாரிகளின் கிடுக்குப்பிடி நடவடிக்கையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு மக்களுக்கு பாதை வசதி கிடைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News