போடி மலையடிவாரத்திலும் மக்களை மிரட்டி வரும் சிறுத்தைப்புலி
போடி மலையடிவாரத்தில் சிறுத்தை புலி உலவுவதாக விவசாயிகள் அளித்த தகவலை வனத்துறை மறுக்காததால் பொதுமக்களிடம் பீதி நிலவுகிறது;
பைல் படம்
தேனி மாவட்டம், போடி மலையடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக விவசாயிகள் சிலர் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், மசனக்குடியில் 4 பேரை கொன்ற புலியை இன்னும் பிடிக்க முடியாமல் அரசு நிர்வாகம் தவித்து வருகிறது. 13 நாட்களை கடந்தும் புலி மீட்புக்குழுவினருக்கு போக்குகாட்டி வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைலாசநாதர் மலையடிவாரத்தில் உலவிய சிறுத்தையினை தற்போது வரை பிடிக்க முடியவில்லை. சிறுத்தை வனத்திற்குள் சென்று விட்டதாக வனத்துறை அறிவித்து விட்டு பிடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கியது.
தேவாரம் மலையடிவாரத்தில் கடந்த மூன்று மாதங்களாக யானை கூட்டம் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மொத்தம் 4 யானைகள் கொண்ட இரண்டு குழுக்கள் தேவாரம் மலையடிவாரத்தில் சுற்றுவதாகவும் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவுரை கூறியதோடு தனது வேலையை முடித்துக்கொண்டது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் போடி மலையடிவாரத்தில் சிறுத்தை உலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையடிவார தோட்டங்களில் வேலை பார்த்த விவசாயிகள் சிறுத்தையை பார்த்தாக கூறியதால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். போடி மலையடிவார கிராம மக்கள் இது பற்றி அச்சத்துடன் வனத்துறையினரிடம் விசாரித்த போது, வனத்துறை அதிகாரிகள் அதனை மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை. இதனால் மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி நிலவுகிறது.