40 ஆண்டுகளாக சீரமைக்காத வாய்க்கால்; அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் வேதனை

மூன்று போகம் நெல் விளைந்த வயல்கள் 40 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக கிடக்கின்றன என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.;

Update: 2021-08-21 08:15 GMT

தேனி மாவட்டம் புல்லக்காபட்டியில் வறண்டு கிடக்கும் நெல் வயல்கள்.

வைகை அணைக்கும், மஞ்சளாறு அணைக்கும் நடுவில் அமைந்திருக்கும் வறண்ட கிராமங்கள் எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி, புல்லக்காபட்டி. இக்கிராமங்களில் 1250 ஏக்கர் நிலங்கள் மஞ்சளாறு அணை தண்ணீர் மூலம் மூன்று போகம் நெல் சாகுபடி பெற்றன. கிடந்தட்ட 1980ம் ஆண்டு வரை இந்த கிராமங்களில் மூன்று போக நெல் விளைச்சல் இருந்து வந்தது. இந்த கிராமங்களில் கண்மாய் ஏதும் இல்லை. கால்வாய் தண்ணீர் மூலம் நேரடி பாசனம் மட்டுமே நடைபெற்று வந்தது.

காலப்போக்கில் நீர் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, நீர் பகிர்மானத்தில் ஏற்பட்ட குளறுபடி, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக ஒரு போக நெல் சாகுபடி விளைவதே பெரிய சிரமம் என்ற நிலை உருவாகி விட்டது. ஆமாம் ஏதாவது ஒருமுறை கனமழை பெய்தால் மட்டுமே ஒரு போக நெல் சாகுபடி விளையும்.

எருமலைநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவர் எஸ்.பால்ராஜ் கூறுகையில், 'மஞ்சளாறு அணையில் இருந்து 12 மடைகளை கடந்து தண்ணீர் 13வது மடைக்கு வந்தால் மட்டுமே எருமலைநாயக்கன்பட்டி, புல்லக்காபட்டி, டி.வாடிப்பட்டி கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். நெல் சாகுபடி நடைபெறும். தற்போது உள்ள நிலையில் தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகி வி்ட்டது. வரும் தண்ணீரை வழியோர மடைகளில் எடுத்துக் கொள்வார்கள்.

எனவே எங்களுக்கு தண்ணீர் கிடைக்க மஞ்சளாறு அணையில் இருந்து 13வது மடைக்கு நேரடியாக ஒரு கால்வாய் வெட்டி தண்ணீரை கொண்டு வந்தல் மட்டுமே இக்கிராமங்களில் பாசன வசதி கிடைக்கும். சுமார் 40 ஆண்டுகளாக நாங்கள் இந்த கோரிக்கையினை வைத்து வருகிறோம். இதற்காக தேனி மாவட்ட நிர்வாகம், திட்ட இயக்குனர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பி வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News