ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்கு வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கல்

தேனி மாவட்டத்தில், மலைக்கிராம மக்களுக்கு வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2021-09-15 13:30 GMT

தேனி மாவட்டம், போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிறைக்காடு கிராமத்தில், வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில், 22க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆதிவாசியின மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் நகர் பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு தேடிவந்து ரேஷன் கடையினை கண்டுபிடித்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்வதில்லை.

இந்த நடைமுறை சிக்கலால் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இதற்கு தீர்வாக வாகனங்களில் ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று ரேஷன் பொருட்களை வீடு, வீடாக வழங்கும் திட்டத்தை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து,  இன்று போடி கூட்டுறவு பண்டகசாலையில் இருந்து 14 ரேஷன் பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை, போடி வட்ட வழங்கல் அலுவலர் சதாசிவம், கூட்டுறவு பண்டகசாலை காசாளர் குமரன், ரேஷன் கடை ஊழியர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், வாகனங்களில் ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சிறைக்காடு, சோலையூர் கிராமங்களுக்கு சென்றனர். அங்குள்ள ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு, வீடாக சென்று இலவசமாக வழங்கினர். இந்த முயற்சியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News