திமுக - காங். இடையே பூசல்? போடியில் இரு கட்சிகளும் தனியே ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து, தேனி மாவட்டம் போடியில், திமுக - காங்கிரஸ் கட்சியினர் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க கூட்டணி கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தாலும், இன்று போடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஓரிடத்திலும், காங்கிரஸ் ., கட்சியினர் வேறு இடத்திலும் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க அலுவலகம் முன்பு, வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தலைமையில் திமுக-வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் முகமதுபஷீர், ராஜசேகர், தமிழரசன்,தி.மு.க. வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், போடி இந்திராகாந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர், மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர தலைவர் முஷாக் மந்திரி, நகர செயலாளர் அரசகுமார், நகராட்சி முன்னாள் தலைவர் சங்கரேஷ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசின் தவறான கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை கண்டித்தும், வேலையிழப்பு அதிகரித்து வருவதை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்த போதும், ஒரே நோக்கத்திற்காக தனித்தனியே போராட்டம் நடத்தி இருப்பதால், இரு கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு உள்ளதோ என்று, சிலர் கேள்வி எழுப்பினர்.