போடியில் நகராட்சியில் சுகாதார சீர்கேடு: தொற்று நோய் பரவும் அபாயம்
போடி நகராட்சி பகுதியில் சாக்கடை கழிவுகளை சாலையோரம் கொட்டி வைத்திருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
போடி ஏழாவது வார்டு சர்ச் ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவுகள்.
போடியில் நகராட்சி நி்ர்வாகத்தின் அலட்சியத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கடும் ஆட்சேபம் எழுப்பி உள்ளனர்.
போடியில் முக்கிய வீதிகளில் சாக்கடைகளை துார்வாரிய நகராட்சி பணியாளர்கள் அதன் கழிவுகளை சாலையோரங்களிலேயே கொட்டியுள்ளனர். பல நாட்களாக ரோட்டோரங்களில் கிடக்கும் கழிவுகள் மழைநீரில் கரைந்து சாலை முழுவதும் சாக்கடை நீராக மாறுவதால் வீசும் துர்நாற்றம் அப்பகுதியில் செல்லும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
குறிப்பாக 7வது வார்டு சர்ச் தெருவில் சுகாதார சீர்கேடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் சென்று வர வேண்டும். தவிர கோயில்களுக்கு செல்பவர்களும், மார்க்கெட்டிற்கு செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்த வேண்டும். மிகவும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை இப்படி சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். நகராட்சி நி்ர்வாகத்தின் அலட்சியப் போக்குடன் செயல்படுதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.