உயிரை பறித்த அதிக வேகம்: சின்னமனூர் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி
தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே நடைபெற்ற டூ வீலர் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் பலியாகினர்.;
தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர்கள் அபிமன்யூ, நாகராஜ். இவர்கள் இருவரும் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 3 ஆம் ஆண்டு மெக்கானிக் படித்து வந்தனர். இன்று மாலை, கல்லுாரி முடிந்து டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேப்பம்பட்டி- அழகாபுரி ரோட்டில் பெரும்பாலும் வாகன நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனால், அந்த ரோட்டில் அதிக வேகமாக டூ வீலரில், இருவரும் சென்றுள்ளனர். அழகாபுரி விலக்கு அருகே, டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து தோட்டத்து வேலிக்கு அமைக்கப்பட்டிருந்த கல் கம்பத்தில் மோதியது; இதில், டூ வீலர் டயர் வெடித்தது.
இந்த விபத்தில், இருவரும் சுமார் 30 அடி துாரம் துாக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.