ஆறு மாதங்களுக்கு பின்னர் தேனி- மூணாறு போக்குவரத்து தொடக்கம்

ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு போக்குவரத்து தொடங்கியது;

Update: 2021-10-02 11:00 GMT

கேரளாவை ஒட்டி தமிழக எல்லையில் உள்ள போடி மெட்டில் இருந்து தேனி நோக்கி புறப்பட்ட தமிழக அரசு பஸ்.

கொரோனா இரண்டாவது அலைக்கு  கட்டுப்பாடுகள் தளர்வளிக்கப்பட்ட  ஆறு மாதங்களுக்கு பின்னர் தேனி- மூணாறு இடையே போக்குவரத்து தொடங்கி உள்ளது.

தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் அருகருகே அமைந்துள்ளன. சுமார் 75 கி.மீ., துாரம் எல்லைகளை பகிர்ந்துள்ளன. மூன்று வழித்தடங்களில் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு போக்குவரத்து நடந்து வந்தது. குமுளி வழித்தடத்தில் தேனி மாவட்ட எல்லையிலும், இடுக்கி மாவட்டம் குமுளி எல்லையிலும் 30 மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளன.

இதனால், குமுளி தமிழக பஸ்ஸ்டாண்டிற்கு செல்லும் மக்கள் நடந்து சென்று கேரள பஸ்ஸ்டாண்டில் இருந்து பஸ் ஏறி சென்று விடுவார்கள். ஆனால் கம்பம் மெட்டு பாதையிலும், போடி மெட்டு பாதையிலும் மலைச்சாலையை நீண்ட துாரம் கடக்க வேண்டும். குறிப்பாக போடியில் இருந்து 75 கி.மீ., துாரம் பயணித்தால் மட்டுமே இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு செல்ல முடியும்.

எனவே, கடந்த ஆறு மாதமாக இந்த வழித்தடத்தில் இருமாநில அரசுகளும் பஸ் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்தன. அக்டோபர் முதல் தேதி முதல் கேரள அரசு மூணாறில் இருந்து போடி மெட்டில் தமிழக எல்லை வரை பஸ்களை இயக்கியது. இன்று அக்டோபர் 2ம் தேதி முதல் தேனி, போடியில் இருந்து போடி மெட்டு வரை தமிழக அரசு பஸ்களை இயக்கியது.

தமிழகத்தில் இருந்து செல்லும் மக்கள் போடி மெட்டில் இறங்கி, சிறிது துாரம் கேரளாவிற்குள் நடந்து சென்று, அங்கிருந்து கேரள பஸ்சில் ஏறி மூணாறு செல்ல முடியும். மூணாறில் இருந்து வருபவர்கள் போடி மெட்டில் இறங்கி தமிழக எல்லைக்கு வந்து தமிழக பஸ்சில் ஏறி போடி அல்லது தேனிக்கு வர வேண்டும். இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஜீப்களில் அவர்கள் பயணிக்க பஸ் கட்டணத்தை விட 20 மடங்கு அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். தற்போது அந்த பிரச்னை இல்லை என பொதுமக்கள், தொழிலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News