தீபாவளிக்குள் சம்பளம் வருமா? கிராம ஊராட்சி பணியாளர்கள் தவிப்பு
தமிழகத்தில் பலநுாறு கிராம ஊராட்சிகளில் தீபாவளிக்குள் பல மாதங்களாக பாக்கி இருக்கும் சம்பளம் கிடைக்குமா என ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகள் தங்களது பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன. தமிழகத்தில் பலநுாறு கிராம ஊராட்சிகளில் இந்த சிக்கல் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் வரி போன்ற சில வரிவருவாய்கள் மட்டுமே உள்ளன. ஒரிரு ஊராட்சிகளில் மட்டுமே வரி வருவாய் சில லட்சங்களை தாண்டும். பெரும்பாலான ஊராட்சிகள் அரசு வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதியை நம்பியே இருக்கின்றன.
இந்த நிதியை அரசு மாதந்தோறும் ஊராட்சிகளுக்கு வழங்கி வந்தது. இந்த பணத்தில் இருந்தே சம்பளம், நிர்வாக செலவினங்களை கிராம ஊராட்சி சமாளிக்கும். கடந்த மூன்று மாதங்களாக தேனி மாவட்டத்தில் எந்த ஊராட்சிக்கும் மாநில நிதிக்குழு மானியம் வழங்கப்படவில்லை.
மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே உத்தரவின் கீழ் தான் மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்கப்படும். எனவே மாநிலம் முழுவதும் இதே நிலை தான். ஏற்கனவே பலநுாறு கிராம ஊராட்சிகளில் பல மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது.
இந்நிலையில் அரசும் மாநில நிதிக்குழு மானியத்தை விடுவிக்காததால், இந்த ஆண்டு கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு தீபாவளிக்குள் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் 60 சதவீதம் கிராம ஊராட்சிகளில் சம்பளம் கொடுக்க வழியில்லை. மாநில அளவிலும் இதே நிலை இருக்கும் என ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் நுாறு நாள் வேலை திட்டத்தில் முன்பு பணியாளர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆறு வாரங்களாக அவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு முன்னர் அவர்களுக்கும் சம்பளம் கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றனர்.