மேகமலையிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தல்: வனத்துறை நடவடிக்கை எடுக்குமா
மேகமலையில் இருந்து சமூக விரோதிகள் மரம் கடத்துவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்
மேகமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து இரவு முழுவதும் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
வைகை ஆற்றின் பிறப்பிடமான மேகமலை புலிகள் சரணாலயத்தில் அடர்ந்து ஓங்கி உயர்ந்து வளர்ந்த லட்சக்கணக்கான மரங்கள் உள்ளன. ஒரு மரத்தை வெட்டினால் பல லோடு மரம் கிடைக்கும். பல லட்சம் ரூபாய்க்கு விற்கலாம். சமூக விரோதிகள் மரம் வெட்டிக் கடத்துவதை வாடிக்கையாகவே செய்து வருகின்றனர்.
இதுவரை மேகமலையில் மட்டும் 8க்கும் மேற்பட்ட வனச்சரகர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், யாருமே மரம் கடத்ததை தடுக்க எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. வழக்கம் போல் பகலில் மரங்களை வெட்டி அடுக்கி வைத்து, இரவு முழுவதும் லோடு, லோடாக ஏற்றி வாகனங்களில் கடத்திச்செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் மேகமலையின் வனவளம் குன்றி விடும். வைகை ஆறும் வறண்டு போய்விடும் என வனத்துறையிடம் விவசாயிகளும், பொதுமக்களும் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை.
இதனால் இப்பகுதி மக்களும், விவசாயிகளும் இந்த சமூக விரோத செயலை தடுக்க மாவட்ட நிர்வாகமாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.