தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாத நாளாக நிலைக்காமல் போனது
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் இன்று யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
20 மாதங்களுக்கு பிறகு இன்று தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று இல்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்த சில மணி நேரங்களில், தனியார் மருத்துவமனை பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. இங்கு நடந்து வரும் தினசரி பரிசோதனையில் இன்று முதன் முறையாக ஒருவருக்கு கூட நோய் தொற்று பதிவாகவில்லை. அதாவது 20 மாதங்களுக்கு பிறகு இன்று கொரோனா பாதிப்பு இல்லாத தேனி மாவட்டம் என மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. ஆனால் இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா நிலவரம் குறித்த மீடியா புல்லட்டின் அறிக்கையில், தேனி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று பதிவாகி இருப்பது தெரியவந்தது. எப்படியோ கொரோனா முழு கட்டுக்குள் வந்து விட்டதையே இன்றைய பரிசோதனைகள் உணர்த்துகிறது என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.