கந்துவட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி சிக்கி தவிக்கும் மக்கள் ?
தேனியில் சிறு வியாபாரிகளை வதைத்து வரும் கந்து வட்டி கும்பலிடம் இருந்து எஸ்.பி.மீட்பாரா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேனியில் சிறு வியாபாரிகளை வதைத்து வரும் கந்து வட்டி கும்பலிடம் இருந்து எஸ்.பி.மீட்பாரா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் வட்டிக்கு விடும் கும்பலால் ஏழை கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டிக்கு கொடுப்பவர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே 2 சதவீதம், 3 சதவீதம் வட்டி வாங்குகின்றனர். 95 சதவீதம் பேர் தாங்கள் வட்டிக்கு கொடுக்கும் பணத்திற்கு 10 சதவீதம், நாள் வட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி போட்டு வதைத்து எடுக்கின்றனர். தவிர நுாற்றுக்கணக்கான மைக்ரோ பைனான்ஸ்கள் தேடித்தேடிச் சென்று வட்டிக்கு கொடுத்து விட்டு, ஏழை தொழிலாளர்களையும், சிறு வியாபாரிகளையும் பிழிந்து எடுக்கின்றனர். கந்து வட்டிக் கொடுமையால் உயிரிழந்தவர்களில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
மாவட்டத்தில் கம்பம், கூடலுார், சின்னமனுார், போடி, தேனி ஒன்றிய பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. இங்கு கடன் பட்டவர்களின் வீட்டிற்கு சென்று வீட்டினை அபகரிப்பது, அவர்களது பொருட்களை மீட்பது, சிலர் பெண்களை தவறாக பேசுவது, அவதுாறாக பேசுவது போன்ற கொடும் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மைக்ரோ பைனான்ஸ்களும் இதே செயல்களை செய்கின்றனர். இது குறித்து போலீஸ் ஸ்டேஷன்களில் முறையிட்டால், ஸ்டேஷன்களில் உள்ளவர்கள் கந்து வட்டிக்கும்பலுக்கு ஆதரவாகவே பேசுகின்றனர்.
கடன் பட்டவர்களிடம் ‛அவன் உன்னை தேடி வந்தா கடன் கொடுத்தான். நீயாக தானே போய் கடன் வாங்கினாய்’ என மிரட்டுகின்றனர். ஏதோ ஒரு அவசர சூழலுக்கு வேறு வழியில்லாமல் கடன் வாங்கி விட்டோம். வாங்கிய கடனுக்கு அசல் தொகையினை விட பல மடங்கு வட்டியும் கட்டி விட்டோம் என கடன்பட்டவர்கள் கூறினாலும் அதிகாரிகள் அதனை காதில் போட்டுக் கொள்வதில்லை. இந்த பிரச்னையால் அடிக்கடி கலெக்டர் அலுவலகத்தில் யாராவது தீக்குளிக்க குடும்பத்துடன் வந்த விடுகின்றனர். தேனி மாவட்டத்தின் தீராத இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே நடவடிக்கை எடுப்பாரா? என கடன் பட்டு தவிக்கும் பலரும் பரிதாபமாக கேட்கின்றனர்.