இரண்டாம் திருமணம் செய்த துணை ஜெயிலர் மீது வழக்கு
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்ததோடு, வரதட்சணை கேட்டு கொடுமை செய்த துணை ஜெயிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் நந்தினி, 24. பொறியியல் பட்டதாரியான இவருக்கும், மதுரை அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரை சேர்ந்த முனிஸ் திவாகருக்கும், 35 கடந்த 2021 செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
முனிஸ் திவாகர் விருதுநகரில் துணை ஜெயிலராக அரசு பணியில் இருப்பதால், திருமணத்தின் போது, 45 பவுன் நகை, ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுத்தனர். இந்நிலையில் முனிஸ் திவாகருக்கும் மன்னார்குடியை சேர்ந்த துணை ஜெயிலர் சரண்யாவுக்கும் திருமணம் ஏற்கவே நடந்ததும், முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாம் திருமணம் செய்ததும் நந்தினிக்கு தெரியவந்தது.
மேலும் நந்தினியிடம் கூடுதல் நகை, பணம் வரதட்சணையாக கேட்டு முனிஸ்திவாகர், அவரது தந்தை ராமச்சந்திரன், 62, தாயார் வாசுகி, 58, சகோதரர் ராஜா, 28, சகோதரி சுமதி, 25, ஆகியோர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து நந்தினி ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.