தொடங்கியது தீபாவளி விற்பனை: தேனி வியாபாரிகள் சற்று ஆறுதல்

தேனி பஜாரில் இன்று காலை முதல் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கிராம மக்கள் குவிந்து வருவதால், வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

Update: 2021-10-31 12:51 GMT

தேனி மதுரை ரோட்டில் இன்று காலை ஒன்பது மணிக்கே பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள். 

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகள் (680 கிராமங்கள்) உள்ளன. தவிர ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. சுமார் 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தீபாவளி பொருட்கள் வாங்க  தேனி வந்து செல்வார்கள். அதற்கான உள்கட்டமைப்பு வசதி தேனியில் உள்ளது.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தேனி மாவட்ட தலைநகர் மட்டுமின்றி, வர்த்தக தலைநகராகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக தீபாவளி நேரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் போட்டு பல்வேறு வியாபாரங்களை செய்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தீபாவளி இல்லாமல் போய் விட்டது. இந்த ஆண்டும் நேற்று மாலை வரை தேனி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியே கிடந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கெல்லாம் மக்கள் வரத்தொடங்கினர். காலை முதல் துாறல் தொடங்கினாலும், மக்கள் வரத்து குறையவில்லை. அனைத்து கடைகளிலும் தீபாவளி வியாபாரம் களை கட்டியது. இனி தீபாவளி வரை இந்த வியாபாரம் குறையாது என தேனி நகர வியாபாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News