கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியது
சயான், மறைந்த டிரைவர் கனகராஜின் சகோதரர்கள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.;
கொடநாடு கொலை வழக்கு ஊட்டியில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நீதிபதி சஞ்சய்பாபா முன் ஆஜரானார். மேலும் இந்த வழக்கிற்காக நியமிக்கப் பட்டுள்ள சிறப்பு அரசு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த கிருஷ்ணன். டிகே தேவராஜ், எம் சந்தோஷ்குமார். சுரேஷ் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது போலீஸ் தரப்பில் சயான் மீண்டும் அளித்த மறுவாக்குமூலத்தை நீதிபதியிடம் போலீசார் சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் விசாரணை முழுமையடையாததால், அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க துவங்கி உள்ளதால் கோர்ட்வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் அதிமுக ஆட்சியில் இருந்த முக்கிய விஐபிக்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய பின்னணிகள் :
நீலகிரி மாவட்டம்கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. சொகுசு பங்களாக்களும் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் தலைமையில் ஒரு கொள்ளைக் கும்பல் கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். பின் அந்த கும்பல், ஜெயலலிதா மற்றும் சசிகலா அறைகளுக்குள் இருந்த பல்வேறு சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
சேலம் அருகேயுள்ள ஆத்தூர் பகுதியில் மர்மமான முறையில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மரணம டைந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கோவையை சேர்ந்த சயானும் அடுத்த நாளே சாலை விபத்தில் சிக்கினார். இதில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். சிகிச்சைக்கு பின் சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட இவ்வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு ஊட்டியில் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சயான் உட்பட குற்றவாளிகள் 10 பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக டெல்லியில் சயான் பேட்டி அளித்தார்.
இந்த பேட்டி அளித்த அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளுக்கு பின் சயான் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின், அவர் இவ்வழக்கில் தான் மீண்டும் பல உண்மை தகவல்களை தெரிவிக்க உள்ளதாக கூறினார்.
இதனை தொடர்ந்து, கடந்த 17ம் தேதி சயானிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இதில், சயான் பல புதிய தகவல்களை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரரிடம் விசாரணை மேற்கொள்ள கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதனால் கடந்த 24ம் தேதி ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்திற்கு கனகராஜின் சகோதரர் தனபால் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் நீலகிரி எஸ்பி ஆசிஸ் ராவத் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையில், அரசு தரப்பு சாட்சியாக உள்ள அனுபவ் ரவி என்பவர், வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும், விஐபிக்களிடம் விசாரணை நடத்துவது குறித்து போலீசார் தனியாக ஆலோசனை நடத்தி வருவதால், இந்த வழக்கில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சயான், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் மறைந்த கனகராஜின் சகோதரர்கள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகும் என கூறப்படுகிறது.