நடிகர் விஜய் படத்தை அனுமதியின்றி திரையிட்ட திரையரங்குக்கு அபராதத்தை உறுதி செய்த நீதிமன்றம்

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை அனுமதியின்றி திரையிட்ட ரோகினி திரையரங்கிற்கு அபராதம் விதித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.;

Update: 2023-10-13 12:52 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

சென்னையில் உள்ள ரோகினி சினிமா தியேட்டர் துணிவு, வாரிசு, பத்து தல ஆகிய திரைப்படங்களை அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகள் திரையிட்டதற்காக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அபராதம் விதித்து ஆணை பிறப்பித்து இருந்தார்.

அதனை எதிர்த்து ரோகினி திரையரங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திரையரங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி 24 மணி நேரமும் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக அரசு ஆணை உள்ளது.

திரையரங்கம் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகிறது. எனவே, 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடலாம். எனவே காவல்துறை ஆணையரின் அபராதம் விதித்த உத்திரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பணியாற்றுபவர்களின் பணி வரைமுறைகளுக்காக மட்டுமே தவிர, திரைப்படங்கள் திரையிடுவதற்கு அல்ல.

திரையிடுவது குறித்து தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் விதிகள்தான் பொருந்தும். 24 மணி நேரமும் திறக்கலாம் என்பதற்காக, தணிக்கை செய்யப்படாத திரைப்படங்களை திரையிட்டால் எவ்வாறு மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாமோ அதே போன்று தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்ட விதிகளுக்கு முரணாக கூடுதல் காட்சிகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.

மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதும், பொது ஒழுங்கை நிலைநிறுத்துவதும் காவல்துறை ஆணையரின் கடமை. இப்படி விதிகளை மீறி ரோகினி திரையரங்கம் அதிகாலையில் கூடுதல் காட்சிகள் திரையிட்டதால் ஒருவர் மரணித்திருக்கிற நிகழ்வும் நடந்திருக்கிறது.

தமிழ்நாடு சினிமா திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளரான இந்த வழக்கை தாக்கல் செய்தவர்தான், கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டும் மனு கொடுத்துள்ளார். கூடுதல் காட்சிகள் திரையிட தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் மனு கொடுத்துவிட்டு தற்போது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடலாம் என முரண்பாடாக மனுதாரர்கள் கூறுகின்றனர் என்றும் அசன் முகமது ஜின்னா வாதிட்டார்.

அதனை ஏற்றுகொண்ட நீதிபதி, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கூறியதன்படி திரைப்படங்களை திரையிடுவதற்கு தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டம்தான் பொருந்தும் என்றும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பொருந்தாது என்றும், காவல்துறை ஆணையாளர் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Similar News