நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2023-24 ஐ விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.;
2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளை சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன் படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் அறிவிக்கப்பட்டு மூன்றாவது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
தமிழக அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பல்வேறு துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் 23, 24, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும். காலை, மாலை என இரு வேளைகளிலும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும். காலை 10 – 2 மணி வரை, மாலை 4 – 8 மணி வரை என இரு நேரங்களில் அவை நடைபெறும். காலை நேரத்தில் கேள்வி நேரம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.