125 வது மலர்க்கண்காட்சி உதகையில் நாளை துவக்கம்: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கோடை விழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற 125 வது மலர்க்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நாளை துவங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.;
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிவது வழக்கம். அவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் மலர்கண்காட்சி மற்றும் கோடை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் பன்னிரெண்டாவது காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. இதனைத் தொடர்ந்து உதகை ரோஜா பூங்காவில் கடந்த 13ம் தேதி துவங்கிய 18 வது ரோஜா கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து கோடை விழாவின் முக்கிய நிகழ்வான உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவின் 125 வது மலர்க்கண்காட்சி நாளை துவங்கி மே 23ம் தேதி வரை என தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
மலர்கண்காட்சி காண வரும் சுற்றுலாப் பயணிகளை கவர 80 ஆயிரம் கார்னேஷன் மலர்களைக் கொண்டு சுமார் 45 அடி உயரத்தில் தோகை விரித்தாடும் பிரம்மாண்ட மயில் வடிவமைப்பு, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வாழக்கூடிய புலி, சிறுத்தை, வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வடிவமைப்புகள், மேலும் காண்டாமிருகம், டால்பின், பட்டாம்பூச்சி, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களின்
வடிவமைப்புகளும், அரசு தாவரவியல் பூங்கா உருவாகி 175வது ஆண்டு நிறைவடைவதையொட்டி175th Year Garden என்ற வடிவமைப்பும், 125வது மலர்கண்காட்சியில் வடிவமைப்புகள் போன்றவை அனைத்தும் கார்னேஷன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உதகையில் நாளை துவங்கும் 125 வது மலர்கண்கட்சியினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ் பி அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளை கவர கொய் மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கும் பணிகளில் வடிவமைப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.