புளியங்குடியில் காட்டு யானைகள் அட்டகாசம்; விவசாயிகள் கவலை
புளியங்குடியில் காட்டு யானைகள் அட்டகாசம்; விவசாயிகள் கவலை
புளியங்குடி மேற்கு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி மேற்கு பகுதியில் பல ஏக்கரில் விவசாயிகள் மா ,பலா ,தென்னை, எலுமிச்சை,வாழை உள்ளிட்டவைகளை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
மேலும் புளியங்குடி மேற்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் எலுமிச்சை, மா, பலா, தென்னை,வாழை உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த நிலையில் அப்பகுதியில் காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் .
இன்று அதிகாலை காட்டு யானைகள் கூட்டம் தொடர்ந்து விளை நிலங்களுக்குள் வந்து 10 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி வேரோடு புடுங்கி எறிந்துள்ளது. ஏராளமான வாழை மரத்தையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் வனத்துறையினர் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் எப்போது ஒருமுறை மட்டும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் நிரந்தரமாக யானையை காட்டுக்குள் விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர் .கடந்த சில நாள்களால் யானைகள் விளை நிலத்திற்குள் புகுந்து தென்னை,வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறினர்.
எனவே இனிவரும் காலங்களில் யானைகள் விளைநிலங்களுக்கு புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.