மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
மாமன்னன் பூலித்தேவனின் 309 -வது பிறந்தநாள் விழா நெல்கட்டும் செவலில் கோலாலமாக கொண்டாடப்பட்டது;
மாமன்னர் பூலித்தேவரின் 309 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெற்கட்டும் செவலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னையில் திருவுருவச் சிலை நிறுவ வாரிசு தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1722ஆம் ஆண்டுகளில் அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும் செவல் பாளையத்தை ஆண்டு வந்த மன்னர் பூலித்தேவர். இவர் வெள்ளையர்களின் ஏகாதிபதியத்தை எதிர்த்து ஒரு பிடி அளவு மண் கூட தரமாட்டேன் என போராடிய முதல் சுதந்திர போராட்ட மன்னர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
அந்த வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 309-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான இப்போதயை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த நெற்கட்டும் செவல் கிராமத்தில் அவரது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. முதற்கட்டமாக மாமன்னர் பூலித்தேவரின் வாரிசுதாரர்கள் அவரது குலதெய்வமான உள்ளமுடையார் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து மாமன்னர் பூலித்தேவர் அரண்மனையில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பால் அபிஷேகம் நடத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், உட்பட அரசு அதிகாரிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மாமன்னர் பூலித்தேவர் அரண்மனையில் காட்சியப்படுத்தப் பட்டிருந்த அவர் பயன்படுத்திய போர்கருவிகள் மற்றும் வரலாற்று பதிவுகளை பார்வையிட்டனர்.
மேலும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் என அவரது திருவுருவ படத்திற்கு மாலை மணிவித்து அஞ்சலி செலுத்த, வாகனங்களில் கூட்டம் கூட்டமாக அதிகளவில் மக்கள் வருகை தர இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ளே நுழையும் அணைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது
தென்மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் 2 எஸ்பிக்கள், 4 ஏ டி எஸ் பி க்கள், 15 டிஎஸ்பிக்கள், 55 காவல் ஆய்வாளர்கள் 154 சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1600 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேனி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாமன்னர் பூலித்தேவருக்கு அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் தலைநகரமான சென்னையில் திருவுருவ சிலை அமைக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சூட்டப்பட்டிருந்த மாமன்னர் பூலித்தேவரின் பெயரை மீண்டும் சூட்டப்பட வேண்டும். அவரது பெயரில் தபால் தலை வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.