தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மதுப் பிரியர்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் பெற்று மது அருந்தி வருகின்றனர். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களில் மது பாட்டில் கடத்த படுகிறதா? என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை புளியங்குடி சந்தைக்கு கர்நாடகாவில் இருந்து தக்காளிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியினை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
சோதனையின்போது தக்காளி பெட்டிக்குள் மறைத்து வைத்து கர்நாடக மாநில 20 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டி வந்த இரண்டு நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.