அரிசி வியாபாரியிடம் நூதன மோசடி செய்ய முயற்சி: இருவர் கைது
அரிசி வியாபாரியிடம் நூதன மோசடி செய்ய முயற்சித்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
தென்காசி மாவட்டம், சிவகிரி பஜாரில் அரிசி கடை வைத்து நடத்தி வருபவர் தங்கராஜ் (37). கடந்த 20 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் பழகி வந்த வட நாட்டைச் சேர்ந்த சுனில் (42) மற்றும் கிஷன் (63) இருவர் தங்களிடம் புதயலில் கிடைத்த தங்க தோரணங்கள் இருப்பதாகவும், அவை இரண்டு கிலோ இருக்கும் எனவும் வேறு யாரிடமும் கொடுக்க முடியாததால் நன்றாக பழகிய தங்களிடம் அதை தருகிறோம் எங்களுக்கு அவசரமாக 5 லட்சம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு சேம்பிலாக தங்க முலாம் பூசிய இரண்டு குண்டு மணி அளவில் கொடுத்துள்ளனர். அதன்படி 2500 ரூபாய் முன்பணமாக தங்கராஜ் இவர்கள் இருவரிடமும் கொடுத்துள்ளார்.
பின்பு சற்று சந்தேகம் அடைந்த அரிசி கடை தங்கராஜ் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி இருவருக்கும் ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு செய்தார்.
தங்கராஜ் மற்றும் காவல்துறையினர் இணைந்து தில்லாலங்கடி பேர்வழிகள் இருவரையும் வரவழைத்து அமுக்கப் பிடித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து போலியாக தங்கம் மூலம் பூசப்பட்டு இருந்த போலி தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்பு அவர்களை சிவகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்ததில் குஜராத் மாவட்டம் அகமதாபாத் டக்கர் நகர்பகுதியைச் சேர்ந்த சுனில் (42)மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிஷன் (63) என்பதும் தெரிய வந்தது.
மேலும் இவர்கள் இருவரிடமும் நடைபெற்ற கிடைக்கப் பிடி விசாரணையில் 20 நாட்களுக்கு முன்பாக கடையநல்லூர் பகுதியில் கூடாரம் அமைத்து குடும்பத்துடன் அவர்கள் தங்கி இருந்ததும், கடந்த பத்து ஆண்டுகளாக இதைப் போல கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த யுத்தியை பயன்படுத்தி இலட்சக்கணக்கில் மோசடி செய்து பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதனை எடுத்து அவர்கள் தங்கி இருந்த கடையநல்லூர் பகுதிக்கு சென்று பார்த்தபோது அவர்கள் சொன்ன குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே யுத்தியை பயன்படுத்தி இலட்சக்கணக்கில் மோசடி செய்து வந்த தில்லாலங்கடி ஆசாமிகள் இருவர் சிவகிரியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினரின் மீது உள்ள நன்மதிப்பை பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி துணை கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் வெங்கடேசன் காவல்துறையினரை வெகுவாக பாராட்டியதுடன், இதைப்போல புதையல் எனக் கூறி வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய நபர்களிடம் ஏமாந்தவர்கள் வெக்கப்பட்டு புகார் அளிக்காமல் இருந்து விடுகின்றனர்.
அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பத்து வருடங்களாக போலீஸிடம் சிக்காமல் இருந்துள்ளனர். அதைப்போல இல்லாமல் பொதுமக்கள் தைரியமாக சந்தேகப்படும்படியான இத்தகைய நபர்களைக் கண்டறிந்தால் உடனடியாக உள்ளூர் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் இத்தகைய வெளிமாநில ஆசாமிகளுடன் ஏமாற வேண்டாம் எனவும் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சுனிலின் (42) முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவி லட்சுமிகா கர்நாடகா சிறையில் கடந்த 2022 ல் 5 பேர் கொலையில் சிறை தண்டனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.