சங்கரன்கோவில் அருகே பாறையில் வழுக்கி விழுந்து 15 வயது பெண் யானை உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே பாறையில் வழுக்கி விழுந்து 15 வயது பெண் யானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், கடமான், மிளா, அரிய வகை ராஜநாகம், என எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவைகள் அவ்வப்போது வண பகுதியில் இருந்து மலையடிவார பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மான் போன்ற விலங்குகளை உணவிற்காக வேட்டையாடுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் வேர்புலி வன சரக்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாறையின் நடுவே சிக்கிய பதினைந்து வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்து கிடப்பதாக ரோந்துப்பணியில் இருந்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட வன மருத்துவ குழு உடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்..
பெண் யானை பாறையில் வழுக்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து மேற்குதொடர்ச்சி மலையில் யானைகள் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு வனத்துறையை நவீனப்படுத்தி தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளை கொடுத்து வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.