குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து காட்டுயானைகள் அட்டகாசம்: தொழிலாளர்கள் அச்சம்
மாஞ்சோலை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டுயானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள். மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊத்து குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று விரட்டியும் அங்கிருந்து செல்லாமல் பொதுமக்களிடத்தில் நன்றாக பழகி அவர்கள் கொடுக்கும் உணவை உண்டு வளர்ப்பு யானையைப் போல் குடியிருப்பு பகுதிகளில் தங்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டுயானை வீடுகளின் பின்புறம் வளர்த்து வரும் வாழை உள்ளிட்டப் பயிர்களை உண்டு சேதப்படுத்தி வருகிறது.
மேலும் தேயிலைத் தோட்டப்பகுதியில் உற்சாகமாக அங்கும் இங்கும் ஓடி விளையாடி வருகிறது. இந்த யானை உட்பட நான்கு யானைகள் அதே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. பகல் நேரங்களிலும் குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதியில் யானைகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் போர்க்கால நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.