மலையில் குடியேறி போராட்டம் நடத்துவோம்: சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் ஆவேசம்
அரியூர் மலையடிவாரத்தில் மண் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம்.
சங்கரன்கோவில் அருகே அரியூர் மலையடிவாரத்தில் மண் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மலையில் குடியேறி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட இருமன்குளம் கிராமத்தில் வடபுறம் உள்ளது அரியூர் மலை இந்த மலையில் பெய்த மழையினால் நான்கு குளங்களினால் ஆயிரகணக்கான விவசாய நிலங்கள் உட்பட எட்டு கிராம மக்களின் வாழ்வாதாரம் இந்த அரியூர் மலையினால் பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது அப்பகுதியில் சேம்பர் வைத்திருக்கும் தனிநபர் ஒருவர் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களை விளைக்கு வாங்கி கல்குவாரி அமைத்து மலையடிவாரத்தில் உள்ள மண் வளங்களை லாரிகள் மூலம் அருகில் உள்ள சேம்பருக்கு கொண்டு செல்கிறார். அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்சலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனிம வளக் கொள்ளை சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த இருமன்குளம் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கூட்டம் கூடி கல்குவாரி அமைத்து கனிம வளக்கொள்ளையில் ஈடுபட அனுமதி கொடுத்ததை உடனடியாக இரத்து செய்ய வேண்டும், இல்லை எனில் நாளை மறுநாள் கிராமங்களை காலி செய்து மலையில் குடியேறி போராட்டம் நடத்துவோம் என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.