சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே பதிவு!

சங்கரன்கோவில் அருகே உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் புறக்கணித்தனர்

Update: 2024-04-19 13:52 GMT

வாக்காளர்கள் வராததால் வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தில் சாலை வசதி, வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அக்கிராமத்தின் அருகே உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்

இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1,045 ஓட்டுகள் உள்ள கிராமத்தில் வெறும் பத்து ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. வெறிச்சோடிக் காணப்படும் வாக்குச்சாவடி மையத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செய்தியாளர்கள் பேசியதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி மையத்தில் செய்தியாளர்கள் செய்திகளைச் சேகரித்தனர்.

தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற தென்காசி மாவட்டம், முழுவதும் சுமார் 1,700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், ஏழு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததாக, மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்துத் தேர்தல் புறக்கணித்து பெரும்பாலான மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையி, 1,045 ஓட்டுகள் உள்ள நிலையில் இதுவரை 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News