பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மீதான புகார் ஆதாரமற்றது

பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி மீது தீண்டாமை வழக்கு புகார் ஆதாரமற்றது என முதன்மை கல்வி அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார்

Update: 2022-09-19 17:11 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்து தீண்டாமை காட்டியதாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மகேஸ்வரன்(40) ராமச்சந்திரன் (எ) மூர்த்தி (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மகேஸ்வரன் பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாகுபாடு இருப்பதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் உள்ள 23 மாணவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர். ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வங்கி கணக்கு இணைப்பு பெறுவதற்காக சங்கரன்கோவில் சென்று விட்டதால் அவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.

பள்ளியில் உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் அன்றாட நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியில் கழிப்பிடம்,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் விசாரணை செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் பெஞ்ச் டெஸ்க் எதுவும் இல்லை. பள்ளி தொடர்பாக புகார் கூறப்பட்டது ஆதாரமற்றது. முறையான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

இதன் பின்னர் மாவட்ட குழந்தைகள் அலுவலர் சுப்புலட்சுமி பள்ளிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News