சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற இருவர் கைது

சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-20 03:04 GMT

கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இருவர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சென்னை சேர்ந்தவர்கள் என்பதாலும் காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாலும் இருவரும் வந்த 2 சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது 2 சக்கர வாகனத்தில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் வந்தவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பதும், மற்றொருவர் சங்கரன்கோவிலை பூர்வீகமாக கொண்டு தற்போது சென்னையில் வசித்து வரும் காஜா நஸ்முதீன் என்பதும் தெரிய வந்தது.

மேலும் காஜா நஸ்முதின் ஏற்கனவே சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது பிணையில் வெளியே வந்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து மேலும் காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் கொண்டு வந்தது கள்ள நோட்டு என்பதும் அந்த கள்ள நோட்டுகளை சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் புழக்கத்தில் விட வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் 2 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News