2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்...
2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது, இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் கடந்த 2020 -ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் மணிமுத்தாறு அருவி சேதமடைந்தது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.
அதைத்தொடர்ந்து, வெளி மாவட்டங்களில் இருந்து கார்களில் வருகை புரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். இருப்பினும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே அனுமதி என்பதால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் வரும் சுற்றுலா பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் திருப்பி அனுப்பினர்.மேலும் அனைத்து வாகனங்களிலும் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.