சங்கரன்கோவில் அருகே கல்குவாரி மற்றும் மணல் குவாரி பிரச்னை: முடிவுக்கு வந்த போராட்டம்
அரியூர் மலையில் கல்குவாரி- மணல் குவாரி தொடர்பாக அறிவிக்கப்பட்ட மலையேறும் போராட்டம் பேச்சுநடத்திய பின் முடிவுக்கு வந்தது.;
சிவகிரி வட்டாட்சியர் செல்வகுமார் அரியூர் மலைக்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்
சங்கரன்கோவில் அருகே அரியூர் மலையில் கல்குவாரி மற்றும் மணல் குவாரி தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் அளவீடு செய்து ஆய்வு செய்யப்படும் என வருவாய்துறையினர் கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மலையேறும் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தனர்.இதனால் 4 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வடக்குபுதூர் ஊராட்சிக்குட்பட்ட இருமன்குளம் கிராமத்திற்கு வடக்கே உள்ள அரியூர் மலையில் தனிநபர் ஒருவர் கல்குவாரி மற்றும் மணல் குவாரி அமைத்து ஆயிரக்கணக்கான யூனிட் அளவிற்கு காவல் துறையின் உதவியோடு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 4 குளங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும் கிராம மக்கள் வருவாய் துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை நடத்தினர்.ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கல்குவாரி மற்றும் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய அமைப்பினர் உட்பட கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அரியூர் மலையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் பின்தொடர்ந்து மலையில் ஏறி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து சிவகிரி வட்டாட்சியர் செல்வகுமார் அரியூர் மலைக்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் கல்குவாரி மற்றும் மணல் குவாரி அமைந்துள்ள இடங்களை அளவீடு செய்து ஆய்வு செய்யப்படும் என அவர் கூறியதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதன் பிறகு தமிழ் தேசியஅமைப்பினர் மற்றும் விவசாயிகள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர். 4 மணி நேரத்திற்குப் பிறகு மலையேறும் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையொட்டி அரியூர் மலைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.