தென்காசி: பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி
உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில், ஒன்பது மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என்றாலும், ஒவ்வொரு பகுதியிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் திமுக அதிக இடங்களை பிடித்துள்ளது. அதுபோன்று, பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி அடைந்துள்ளனர். அதுபோன்று, குடும்பமாக தேர்தலில் போட்டியிட்டவர்களும் வெற்றி கண்டுள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பெருங்கோட்டூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முருகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சின்னத்தாய் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 8 பேர் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.