சங்கரன்கோவிலில் ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்ததால் மக்கள் அச்சம்
சங்கரன்கோவிலில் வெறிநாய் கடித்து 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சங்கரன்கோவிலில் ஓரே நாளில் வெறி நாய் கடித்து 50 மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் வெறிநாய் கடித்து 50 -க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஒரு சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாரதியார் தெரு, முல்லை நகர், கழுகுமலை ரோடு, திருவள்ளுவர் தெரு, சங்கர்நகர், கணபதி நகர் உள்ளிட்ட தெருக்களில் வெறிநாய் ஒன்று குழந்தைகளையும் பாதசாரிகளை கடித்து துன்புறுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடித்து சிகிச்சைக்காக வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெவ்வேறு தெருக்களில் சுற்றித் திரிந்து, தெருக்களில் நடமாடும் நபர்களை வெறிநாய் கடிப்பதால் வெறி நாயை பிடிக்க சங்கரன்கோவில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெறிநாய்களுக்குப் பயந்து பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.