சங்கரன்கோவில் நகராட்சி தலைவரை கண்டித்து பொது மக்கள் போராட்டம்
சங்கரன்கோவில் நகராட்சி தலைவரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தராத நகர் மன்ற தலைவரை கண்டித்து 22 வது வார்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவராக உமா மகேஸ்வரி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நகர மன்ற தலைவராக பதவி ஏற்றதில் இருந்து சங்கரன் கோவிலில் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் உமா மகேஸ்வரி சொந்த வார்டு பகுதியான 22 ஆவது வார்டு பகுதியிலேயே சாலை அமைக்க பணிக்காக தோண்டப்பட்டு ஆறு மாத காலமாகியும் சாலையும் அமைக்காமல் கழிவுநீர் வாய்க்கால் பணிகளையும் முடிக்காமல் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிற்கு உள்ளே செல்வதற்கும் நடமாடுவதற்கும் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சங்கரன்கோவில் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
சாலை மறியலில் ஈடுபடுட முயன்ற பொதுமக்களை காவல்துறையினர் தடுத்ததால் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.. மேலும் நகராட்சி நிர்வாகம் இன்னும் இரண்டு நாட்களில் இதற்கான பணி நடைபெறும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.