தமிழக முதல்வருக்கும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த புளியங்குடி விவசாயிகள்
புளியங்குடி நஞ்சை விவசாய சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து சென்னையில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.;
திருமங்கலம் முதல் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை விவசாயம் அல்லாத மாற்று பாதையில் கொண்டு செல்ல தமிழக முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதற்கு புளியங்குடி நஞ்சை விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்து சென்னையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்..
திருமங்கலம் முதல் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் மூன்று போகம் நெல் விளையக்கூடிய பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிப்பதாக புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால் பல்வேறு மனுக்களை மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்த நிலையில் நெடுஞ்சாலைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை தயார் செய்து வந்த நிலையில் அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோரை புளியங்குடி பகுதிகளைச் சேர்ந்த நஞ்சை விவசாய சங்கத்தினர் நெடுஞ்சாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாய நிலங்கள் அல்லாத மாற்றுப்பாதையில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நாளை உடனடியாக இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தெரிவித்தனர்.
அதனால் தமிழக அரசுக்கு புளியங்குடி, வாசுதேவநல்லூர் சிவகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நஞ்சை விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்து சென்னையில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.