சங்கரன்கோவில்: அனுமதி மீறி விளையாட்டு போட்டி நடத்திய 300க்கும் மேற்பட்டோர் கைது
குறிஞ்சாக்குளம் பகுதியில் அனுமதியை மீறி இன்று விளையாட்டு போட்டி நடத்திய 300க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.;
குறிஞ்சாக்குளம் பகுதியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு, காவல்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியை மீறி இன்று விளையாட்டு போட்டி நடத்திய 300க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேங்கடம் தாலுகா குறிஞ்சான்குளம் பகுதியில் ஆதிதிராவிட சமுதாய மக்கள் அங்கு உள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக அனுமதி காவல்துறையிடம் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து கடந்த 6 நாட்களுக்கு முன்பு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து குறிஞ்சாக்குளம் பகுதியில் நேற்று வரை சுமார் 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து சங்கரன்கோவில் கோட்டாட்சி தலைவர் ஹஜ்ரத் பேகம் தலைமையில் கடந்த 2ஆம் தேதி அமைதிக் கூட்டம் நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் இதனை அடுத்து மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து உடன்பாடு எட்டப்படவில்லை என கூறி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பெண்கள் மற்றும் இன்று அந்த விளையாட்டு மைதானத்தில் பெண்கள் அனைவரும் இணைந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை காவல்துறையினர் அனுமதி இன்றி நடத்திக் கொண்டிருக்கும் போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலான காவல்துறையினர் அனுமதி இன்றி விளையாட்டு போட்டி நடத்திய கிராமப் பெண்கள் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தற்போது தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து காவல்துறையினரின் அனுமதியை மீறி பெண்கள் விளையாட்டுப் போட்டியை நடத்தியதாக 500 க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.