ரூ 47 லட்சம் பண மோசடி: முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வீட்டுமுன் கேரள தம்பதி போராட்டம்
சங்கரன்கோவில் அருகே பண மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வீட்டுமுன்பு கேரளா குடும்பத்தினர் போராட்டம்.
சங்கரன்கோவில் அருகே ரூ 47 லட்சம் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும், பணத்தை வாங்கித்தர கோரியும் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வீட்டுமுன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடுக்கி மாவட்டம் கட்டப்பானயைச் சேர்ந்த சூரியன்அகஸ்தி மகன் பிரவின் அகஸ்தி. அவருக்கு ஏலக்காய் எஸ்டேட் வாங்குவதற்கு ரூ 10 கோடி பைனான்ஸ் வாங்கித் தருவதாக இடைத்தரகர்கள் சிலர் கூறியதைத் தொடர்ந்து பிரவீன் சேடப்பட்டிக்கு சென்று அங்கு சிலரிடம் ரூ 47 லட்சம் கொடுத்தாராம். பல நாள்கள் கியும் அவர்கள் பைனான்ஸ் வாங்கித் தரவில்லையென்றும், பணத்தை திரும்பக் கேட்டும் அவர்கள் தரவில்லையென்றும் ரூ 47 லட்சம் மோசடி செய்த கொல்லத்தைச் சேர்ந்த பாபு, குமார் , சேடப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன், சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முருகையா ஆகியோர் மீது மதுரை காவல் நிலையத்தில் பிரவீன் புகார் செய்தார்.இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரவீன் தனது மனைவி குழந்தைகளுடன் இன்று குருக்கள்பட்டிக்கு வந்து, முருகையா வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பணத்தைக் கொடுப்பதற்கு முருகையா உடந்தையாக இருந்ததால் அவர் பணத்தை திரும்ப வாங்கித் தரவேண்டும் என கூறி நீண்ட நேரம் அவர் வீட்டு முன்பு அமர்ந்திருந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலாங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது முருகையாவிடமும், பிரவீனிடமும் விசாரணை செய்த காவல்துறையினர் ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நாளை மறுநாள் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற இருப்பதால் அங்கு முறையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தனர்.இதையடுத்து அவர்கள் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இருப்பினும் தனக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் முருகையா வீட்டு முன்பு குடும்பத்துடன் அமர்ந்து போராட்டம் நடத்துவேன் என பிரவீன் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.