சங்கரன்கோவில் தனியார் நூற்பாலை ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 4 ஆவது நாளாக போராட்டம்
விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை வழங்கக் கோரி 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்து கின்றனர்
சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலையில் விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றை வழங்கக் கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 15 வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் விருப்ப ஓய்வு, பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஆகியவையும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்டோர் ஆலையின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். தற்போது வரை நிலுவைத் தொகை வழங்காததால்200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பணிக்கொடை , வருங்கால வைப்பு நிதி மற்றும் விருப்ப ஓய்வு வழங்க கோரி நூற்பாலையின் நுழைவுவாயிலில் அமர்ந்து நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது வரை ஆலை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து பேசவில்லை என்பது தொழிலாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..