உக்ரைனில் படிக்கும் சங்கரன்கோவில் மாணவரை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை
சங்கரன்கோவில் அருகே வீட்டை அடமானம் வைத்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க அனுப்பிய மகனை மீட்க தையல் தொழிிலாளி கோரிக்கை
சங்கரன்கோவில் அருகே வீட்டை அடமானம் வைத்து தையல் தைத்து தன் மகனை உக்ரைனில் மருத்துவ படிப்பு படிக்க சேர்த்துள்ளேன். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு அனைத்து மாணவர்களையும் சொந்த நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைனில் உள்ள முகம்மது அப்துல்லாவின் தயார் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியை சேர்ந்த கோதரி - ஆயிஷாபீவி. இவருடைய மகன் முகம்மது அப்துல்லாவை மருத்துவம் படிக்கவைப்பதற்காக வீட்டை வங்கியில் அடமானம் வைத்து உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்த்துள்ளனர். அங்கு முகம்மதுஅப்துல்லா, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டுகளை வீசி அழித்து வருவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் இருந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் அருகே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டுகொண்டிருப்பதால் அனைவரும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் அங்கு தங்கியுள்ள அனைவருக்கும் அடிப்படை தேவைகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் உணவு, குடிதண்ணீர், செல்போன் டவர் போன்றவை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருவதாக முகம்மதுஅப்துல்லா அவருடைய தாய் தந்தையிடம் தெரிவித்துள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகள் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக தாய்நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்..